பதிவு செய்த நாள்
26
மார்
2018
11:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் ஊர்வலமாக வந்து, புனித நீர் ஊற்றி செல்கின்றனர். ஈரோட்டில் பெரிய மாரியம்மன், நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், பங்குனி தேர்திருவிழா, கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, மூன்று கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு முதலே, பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பங்களுக்கு மஞ்சள், வேப்பிலை கலந்த புனித நீரை ஊற்றி வருகின்றனர். சிலர் பால் ஊற்றி வழிபடுகின்றனர். பக்தர்கள் அக்னி கபாளம் எடுத்தும், அலகு குத்தி ஊர்வலமாக வந்தும், நேற்றே நேர்த்திக்கடன் செலுத்த தொடங்கினர். அதிகாலை முதல், மதியம் வரை அக்னி கபாளம் ஏந்தி, அலகு குத்தியபடி பக்தர்கள் வந்தனர். கோவில் வளாகத்துக்குள், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. காவிரி கரை, காரை வாய்க்கால் பகுதிகளில் இருந்து, கூட்டம், கூட்டமாக பக்தர்கள் ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலை நோக்கி, வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவ்வப்போது, போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படுகிறது.