பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
ப.வேலூர்: நன்செய் இடையாறு, அக்னி மாரியம்மன் கோவில் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 11ல் துவங்கியது. மறுநாள், ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி கம்பத்திற்கு, அம்மனுக்கு பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி மஞ்சள் கயிறு, காப்பு அணிந்து கொண்டனர். நாள்தோறும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை, வடிசோறு நிகழ்ச்சி, அக்னிசட்டி எடுத்தல் நடந்தது. நேற்று, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த, 63 அடி நீளம், ஆறடி அகலம் கொண்ட பூக்குண்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பெண்கள் பூவாரி போடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரவு, வாணவேடிக்கை நடந்தது. இன்று கிடா வெட்டுதல், அலகு குத்துதல், கரும்பில் தொட்டில் கட்டி கோவிலை சுற்றி வந்து நேர்த்திக் கடன் செலுத்துதல் ஆகியவை நடக்கிறது. நாளை அதிகாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லுதல், மஞ்சள் நீராடல் நடக்கிறது. டி.எஸ்.பி., சுஜாதா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.