பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
01:04
திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காரைக்கால் அம்மையார் குருபூஜை, நேற்று நடந்தது.நாயன்மார்களில், காலத்தால் முற்பட்டவர் காரைக்கால் அம்மையார். சோழநாட்டின் காரைக்காலில், வணிகர் தனதத்தனின் மகளாக பிறந்தார். குழந்தை பருவம் முதலே, சிவபெருமான் மீது பக்தி கொண்டிருந்தார். அவருக்கு, பரமதத்தன் என்ற வணிகருடன் திருமணம் நடந்தது. எனினும், சிவனடியாருக்கு உணவு வழங்குவதை தொடர்ந்து செய்தார். ஒருநாள், அவரது கணவர், இரு மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார். அப்போது வந்திருந்த சிவனடியாருக்கு, ஒரு மாங்கனியை உணவுடன், காரைக்கால் அம்மையார் வழங்கினார். வீடு திரும்பிய கணவர், இன்னொரு மாங்கனியை கேட்டார். அப்போது சிவபெருமானை வேண்ட, மாங்கனி ஒன்று கிடைத்தது.
அதை சுவைத்த கணவர், சுவை மாறுபட்டிருந்ததால், யார் கொடுத்தது என்று கேட்க, நடந்ததை அவர் விளக்கினார். காரைக்கால் அம்மையார், தெய்வப்பிறவி என்பதை, கணவர் உணர்ந்தார். இதனால் இருவரும் விலகி, வாழ்ந்தனர். உறவினர்கள், இருவரையும் சேர்த்து வைக்க முயற்சித்த போது, அம்மையார் காலில் விழுந்து வணங்கிய கணவர், தெய்வப்பிறவி என்று விளக்கினார். இதனால், இறைவனிடம், அம்மையார், பேய் உருவம் வேண்டினார். எலும்பு கூடு மட்டுமே தாங்கிய உருவத்துடன், கயிலாயம் சென்றார் . சிறப்பு பெற்ற காரைக்கால் அம்மையார் குருபூஜை, திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், திருப்பூர் அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று நடந்தது. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடந்தது. அம்மையாருக்கு மாங்கனிகள் படைக்கப்பட்டது; அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.