பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
01:04
திருத்தணி: திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா கடந்த மாதம், 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்து வருகிறது. மேலும், மதியம், மகாபாரத சொற்பொழிவும், இரவு மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது. நேற்று காலை, கோவில் வளாகத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 30 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தொடர்ந்து அர்ஜுனன் தவ வேடத்தில் பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடிவாறு ஏறினர். தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து, அர்ஜுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் பனை மரத்தின் கீழ் படுத்து குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, உற்சவர் திரவுபதியம்மனை வழிபட்டனர். வரும், 8ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது.