புதுக்கோட்டை: திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை நம்பெருமாள் ராஜ அலங்காரத்துடன் பரமபதவாசலை கடந்துவந்து பக்தர்களுக்கு ஸேவைசாதித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ளது சத்தியமூர்த்தி பெருமாள் கோவில். இங்கு பெருமாள் அனந்தசயனத்தில் பள்ளிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். வைணவத் திருஸ்தலங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகும். தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்றுமுன்தினம் ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் வைபவத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. தொடர்ந்து நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவைசாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து விஷ்வரூப அலங்கார காட்சியும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. சரியாக 5.30 மணிக்கு நம்பெருமாள் ராஜ அலங்காரத்துடன் அடியார்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்துவந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை காண நேற்றுமுன்தினம் இரவு முதலே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திருமயத்தில் குவிந்திருந்தனர். நம்பெருமாள் பரமபதவாசலை கடந்ததும் பின்தொடர்ந்துவந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கியவாறு பரமபதவாசலை கடந்துவந்து நம்பெருமாளை தரிசித்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். திருக்கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.