மகாவிஷ்ணு வாமன அவதாரத்தின்போது, உலகை அளப்பதற்காக தன் திருவடியைத் துõக்கினார். அவரது திருவடி பிரம்மாவின் சத்தியலோகம் வரை நீண்டது. அதைக் கண்ட பிரம்மா, விஷ்ணுவின் திருவடியை பூஜிக்கும் விதத்தில் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அப்போது, விஷ்ணுவின் பாதச்சிலம்பில் பட்ட தீர்த்தம் பூலோகத்தில் விழுந்தது. அதுவே மதுரை அழகர்கோவிலில் நுõபுர கங்கையாக விளங்குகிறது. இந்த தீர்த்தக்கரையில் சுதபஸ் என்ற முனிவர் திருமாலை தியானித்து கண் மூடியிருந்தார். அப்போது அங்கு வந்த துர்வாசரைக் கவனிக்காமல் இருந்து விட்டார். கோபமடைந்த துர்வாசர், சுதபஸ் முனிவரை மண்டூகமாக(தவளையாக) பிறக்கும்படி சபித்தார். அதனால், மண்டூக மகரிஷி என பெயர் பெற்றார். சாப விமோசனமாக, “வேகவதி என்னும் வைகையாற்றங்கரையில் தவம் செய். அங்கு பெருமாளின் தரிசனத்தால் விமோசனம் கிடைக்கும்,” என்றார். அதன்படி, மண்டூக மகரிஷி தவமிருந்தபோது, விஷ்ணு தரிசனத்தால் சாபவிமோசனம் வழங்கினார். இந்த புராணத்தின் அடிப்படையில் சித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகையாற்றில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்துஅருள்கிறார். சித்ராபவுர்ணமியின் மறுநாள் தேனுõர் மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார்.