பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
அந்தியூர்: அந்தியூர் அருகே, செம்முனீஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த, பட்லூர் செம்முனீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். கடந்த, 15 நாட்களுக்கு முன், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, குட்டிக்குடி திருவிழா எனப்படும், ஆடுகளை பலியிடும் நிகழ்வு நேற்று நடந்தது. குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்கவும், கால்நடைகளுக்கு நோய் வராமல் காக்கவும், நேர்த்திக்கடனாக ஆடுகளை பலியிடுவது வழக்கம். வெள்ளித் திருப்பூர், பட்லூர், பூனாச்சி, பூதப்பாடி, மாத்தூர், திருச்செங்கோடு, ஈரோடு உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆட்டு கிடாக்களுடன் பங்கேற்றனர். மதிய பூஜையை தொடர்ந்து, சுவாமிக்கு ஆடுகள் பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் பூஜை நடந்தது. தலைமை பூசாரிகள், பலியிடப்பட்ட கிடாக்களின் ரத்தத்தை குடித்தனர். இதில், 2,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. பவானி டி.எஸ்.பி., சார்லஸ் தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பவானி ஆகிய இடங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.