பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் உன்னை வரவழைத்துக் கொண்டார்களோ! பாலகனே! துரோணர், கிருபர் போன்ற வீராதி வீரர்களையெல்லாம் விரட்டியடித்து, சிவபெருமானின் கொன்றை மாலையை ஜயத்ரதன் உனக்கும், பீமனுக்கும் நடுவே வீசிய சமயத்தில் கூட தீரம் மாறாமல் போர் செய்தாயே! வலதுகையை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் உன் ஆற்றலைக் காட்டினாயே! உனக்கா இந்தக்கதி! ஐயா அபிமன்யு! நீயில்லாத இந்த யுத்த களத்தில் பாண்டவர்களுக்கு ஏது இனி வெற்றி! இல்லை.. இல்லை... உன் தாய் சுபத்ரைக்கு என்னால் பதில் சொல்ல இயலாது. மகனைக் காக்கத் தவறிய தந்தை பூமியில் வாழ்ந்து பயனென்ன! நகுலா வா! இங்கே அக்னி மூட்டு. நான் அக்னியில் புகுந்து இறப்பேன், என்றதும், அண்ணன் சொல்லை தட்ட முடியாத நகுலன் வேறு வழியின்றி தீ மூட்டினான். இந்த நேரத்தில் வியாசமுனிவர் அங்கே தோன்றினார்.
அர்ஜுனா! இதென்ன முடிவு! சான்றோர்கள் தங்கள் உறவுகளைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனர் ஆகிய எந்த உறவாயினும் மாயசக்தியின் தோற்றமே! நம்மை இந்த உலக வாழ்வில் கட்டிப் போட்டிருக்கும் கயிறுகளே இவை. இவ்வுலக வாழ்வை விரைவில் விடுத்து இறைவனடியையே நாட வேண்டும். மேலும், உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. மறைந்த உயிர்கள் வேறொரு தாயிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும். மரணம் வாழ்க்கையின் யதார்த்தம். அது வயதையோ, அனுபவத்தையோ, தீரத்தையோ, வீரத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை. மரணத்தின் கரங்களில் சிக்காதவர் யாருமில்லை என்று உணர்ந்த நீயா இப்படி பேசுகிறாய்? பரந்தாமனிடம் கீதை கேட்டவனே! இன்னுமா உனக்கு வாழ்வைப் பற்றி புரியவில்லை, என்று ஆறுதல் சொன்னார். இவ்வளவு துõரம் வியாசபெருமானே சொல்லியும் கூட அர்ஜுனனால் புத்திர சோகத்தை அடக்க முடியவில்லை. பாவம் மனிதர்கள்! குடும்பம் என்னும் பந்தத்தை மட்டும் ஒதுக்க அவர்களால் ஏனோ முடியவே முடியவில்லை. அர்ஜுனன், வியாசரின் அறிவுரையாலும் சமாதானமாகாமல் தீயில் இறங்கச்சென்ற வேளையில், இந்திரனை மீண்டும் அழைத்தார் கண்ணபிரான். இந்திரன் முன்பு போலவே, அந்தணர் வடிவமெடுத்து வந்து, அர்ஜுனா! நில்! அன்றொரு நாள், நான் இதே போல புத்திர சோகத்தால் தவித்த வேளையில் எனக்கு புத்திமதி சொன்னாய். மேலும், உனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் மரணத்தை தழுவுவதில்லை என்ற உறுதி யளித்தாய். இப்போது, உன் உறுதிமொழியை மீறுவதன் மூலம், உனக்கு இழிவைத் தேடிக் கொள்ளப்போகிறாய்! அப்படித் தானே! என்றதும், அவன் சாகவும் முடியாமல், வாழவும் பிரியப்படாமல் பாலைவனத்தின் பயனற்ற பட்டமரம் போல சாய்ந்தான்.
கிருஷ்ணர் அவனுக்கு பன்னீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார். பின்னர் அர்ஜுனன் கோபம் பொங்க போர்க்களத்தில் சபதம் செய்தான். நாளை பகல் பொழுதுக்குள் நான் என் மகனைக் கொன்ற ஜயத்ரதனைக் கொல்வேன். அவ்வாறு கொல்லாவிட்டால் அக்னியில் விழுந்து இறப்பேன் என்றான். இதுகேட்டு தர்மர் அதிர்ந்தார். கிருஷ்ணா! ஜயத்ரதனுக்கு கவுரவப்படை நாளை தகுந்த பாதுகாப்பளிக்கும். அதை மீறி அர்ஜுனன் அவனை அழிக்க முடியாமல் போனால், அவன் நிச்சயம் இறப்பான். அவன் இறந்தபின், மற்ற சகோதரர்களான நாங்களும் உயிர் வாழ மாட்டோம். நீ தான் எங்களுக்கு கருணை காட்ட வேண்டும், என்றதும், மைத்துனரே! கலங்க வேண்டாம். ஜயத்ரதனை அர்ஜுனன் அழிப்பது நிச்சயம், எனச்சொல்லி விட்டு, அர்ஜுனனை அழைத்தார்.அர்ஜுனா! நாம் அவசரமாக சிவலோகம் செல்ல வேண்டும். சிவபெருமானிடம் சில ஆயுதங்களைக் கேட்டுப் பெற வேண்டும்,என்றார். கைலாயம் செல்ல கருட பகவானை அழைத்தார் கிருஷ்ணர். கருடன் அவரையும், அர்ஜுனனையும் ஏற்றிக்கொண்டு கணநேரத்தில் கைலாயத்தை அடைந்தான். சிவதரிசனம் கண்ட அர்ஜுனன் மகிழ்ந்தான். பலமுறை அவரைச் சேவித்தான். தான் தினமும் அர்ச்சனை செய்யும் மலர்கள் சிவனின் பாதத்தில் குவிந்து கிடப்பதைக் கண்டு ஆனந்தமடைந்தான். கிருஷ்ணர் சிவனிடம், அர்ஜுனன் போரில் ஜெயிப்பதற்குரிய ஆயுதங்களைத் தந்தருள வேண்டுமென வேண்டினார். சிவபெருமான் அர்ஜுனனிடம் ஒரு பொய்கையைக் காட்டி அதில் மூழ்கச் சொன்னார்.அர்ஜுனன் அதில் மூழ்கியதும், ஒரு முனிவர் அதனுள் இருந்து வெளிப்பட்டார். அவரது கையில் ஒரு வில்லும் அம்புகளும் இருந்தன. அவை திரிபுரங்களை சிவபெருமான் அழித்தபோது பயன்படுத்தப்பட்டவை. அதைப் பயன்படுத்தும் விதம் குறித்து அந்த முனிவர் அர்ஜுனனுக்கு கற்றுக் கொடுத்ததுடன் சில மந்திரங்களையும் உபதேசித்து மறைந்தார்.
பின்னர் சிவன் அர்ஜுனனிடம், மகனே! இந்த வில்லும், அம்பும் முனிவர் உபதேசித்த மந்திரங்களை உச்சரிக்கும்போது உன் கைக்கு வரும். இதைக்கொண்டு நீ யாரை வேண்டுமானாலும் வெற்றி கொள்ளலாம், என்றார். பின்னர் இருவரும் சிவனிடம் விடைபெற்று திரும்பினர். இந்த இடைவெளியில், பீமனின் மகன் கடோத்கஜனை தர்மர் அழைத்தார். அவனிடம், மகனே! நீ துரியோதனனிடம் சென்று, நாளை பகல் வேளைக்குள் ஜயத்ரதன் கொல்லப்படாவிட்டால், அர்ஜுனன் அக்னியில் குதித்து மாள்வதாக சபதம் எடுத்துள்ளதை சொல்லி வா. மேலும், கிருஷ்ணரும், அர்ஜுனனும் சிவலோகம் சென்று அவனைக் கொல்வதற்குரிய ஆயுதங்களைப் பெற்று வர சென்றுள்ளதையும் அவனிடம் சொல், என்றார்.