பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
அவன்தான் பீமன்! எதற்கும் கலங்காமல் அவன் ஆயுதத்துடன் நின்றான். அப்போது அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை மந்திரம் சொல்லி பாண்டவர் படை மீது ஏவினான். அந்த அஸ்திரத்தில் இருந்து பெரும் காற்றில் வேகமாகப் பரவும் தீயைப்போல, அக்னி ஜுவாலை வெளிப்பட்டது. அதிலிருந்து இடி முழக்கம் போல சப்தம் வெளிப்பட்டது. அந்த அஸ்திரம் பாண்டவப்படையை நெருங்கிய உடன், அனைவரும் அதன் மீது கை வைத்து மிகுந்த பக்தியுடன் வணங்கினார்கள். உடனே அந்த அஸ்திரம் பூமியை நோக்கிப் பாய்ந்தது. பின்னர் மீண்டும் மேலெழும்பி யாராவது ஆயுதத்துடன் நிற்கிறார்களா? என பல திசைகளையும் சுற்றிப் பார்த்தது. பீமன் ஒருவன் மட்டும் ஆயுதத்துடன் நின்றான். அவனை நோக்கி அந்த அஸ்திரம் வேகமாகச் சென்றது. பல அஸ்திரங்களாக மாறியது. அவை அத்தனையும் தேவர்களால் பயன்படுத்தப்படும் அஸ்திரங்களாகும். பீமன், சற்றும் கலங்காமல் அந்த அஸ்திரங்களை நோக்கி முன்னேறிச் சென்றான். எந்த அஸ்திரத்தை, எந்த எதிர் அஸ்திரத்தால் அழிக்க முடியுமோ, அவற்றை ஏவினான். ஆனாலும், நாராயண அஸ்திரத்தின் சக்தி சற்றும் குறையவில்லை. அது மேலும் பல அஸ்திரங்களாக மாறி பீமனை நெருங்கியது. ஆனால், அவனது கண் களிலிருந்து வீசிய கோப ஜுவாலைக்கு அது கட்டுப்பட்டது. பல அஸ்திரங்களையும் பீமன் ஒடித்தெறிந்தான். பல அஸ்திரங் களை தோளில் தாங்கி வீரத்துடன் நின்றான். ஆனாலும், விதியை வெல்ல யாரால் முடியும்? நாராயண அஸ்திரத்துக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. தன்னை எதிர்ப்பவர்களை மட்டுமே அது அழிக்கும். ஆயுதமின்றி நிற்பவர்களை அது ஏதும் செய்யாது. அதன் காரணமாகவே கிருஷ்ண பரமாத்மா, வீரர்களிடம் ஆயுதங்களை கீழே போடச் சொன்னார். பீமன் ஒருவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்த அஸ்திரம் பீமனால் எத்தனையோ முறை தடுக்கப்பட்டபோதும், அதையெல்லாம் மீறி அவனது மார்பை நோக்கி பாய்ந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பீமனின் கையில் உள்ள வில்லையும், அம்பையும் அவனது தேரையும் மாயமாக மறையச்செய்துவிட்டார்.
உடனே நாராயண அஸ்திரம் அவனை அழிக்க தயங்கி, மீண்டும் அஸ்வத்தாமனிடமே போய்ச் சேர்ந்தது. அடுத்து அஸ்வத்தாமன் பாசுபதாஸ்திரத்தை பயன்படுத்த நினைத்தான். இந்த நேரத்தில் பிரம்மதண்டம் ஏந்தி வேதத்தை உச்சரித்தபடியே, வியாச முனிவர் அஸ்வத்தாமன் முன்பு தோன்றினார். அஸ்வத்தாமன் அவரது பாதங்களில் விழுந்து வணங்கி, பல்வேறாக போற்றித் துதித்தான்.வியாசர் அவனை மிகவும் புகழ்ந்தார். வீரனே! நீ வேலேந்திய சுப்பிரமணிய கடவுளுக்கு சமமானவன். பராக்கிரமம் உள்ளவன். உன்னிலும் வலிமை மிக்கவர்கள் இந்த போர்க்களத்தில் யாருமில்லை. துருபதன் பெற்ற ஒரு வரத்தின் காரணமாகவே, உனது தந்தையாகிய துரோணரை திருஷ்டத்யும்னனால் அழிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அவரை யாரும் ஜெயித்திருக்க முடியாது. இனி நீ சிவபெருமானை தியானம் செய்! கடும் தவம் புரி! இந்த பிறவியே வேண்டாமென அவரிடம் வேண்டுகோள் வை. ஐம்புலன்களையும், ஆசைகளையும் அடக்குபவனுக்கு சிவதரிசனம் கிடைக்கும், என உபதேசம் செய்து மறைந்தார்.இதற்குள் சூரியன் அஸ்தமிக்கவே, பதினைந்தாம் நாள் போர் நிறைவுக்கு வந்தது. அன்று இரவில் நடந்த பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் துரியோதனன், தனது படைக்கு கர்ணனை சேனாதிபதி ஆக்குவதென முடிவு செய்தான். இந்த விஷயத்தையும், துரோணர் இறந்து போன விஷயத்தையும் சஞ்சய முனிவரிடம் சொல்லி, திருதராஷ்டிரனிடம் கூறுமாறு அனுப்பி வைத்தான். துரோணரின் இறப்புச்செய்தி கேட்டு திருதராஷ்டிரன் மிகவும் வருந்தினான். மறுநாள் பொழுது விடிந்தது. சூரிய பகவான் அன்று சற்று முன்னதாகவே வந்து விட்டான். ஏனெனில் தனது மகன் கர்ணன், தளபதி ஆனது கண்டு அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாண்டவர்களுடன் அவன் நிகழ்த்தப்போகும் போரை பார்வையிடுவதற்காக முன்கூட்டியே தோன்றிவிட்டான்.துரியோதனன் மிகுந்த நம்பிக்கையுடன் களத்திற்கு வந்தான். பீஷ்மரையும், துரோணரையும் இழந்த பிறகும்கூட, தனது படைக்கு கர்ணன் தலைவனாக இருக்கிறான் என்பதில் அவனுக்குப் பெரும் சந்தோஷம்.
கர்ணன், சேனாதிபதி ஆனதில் கவுரவப் படைகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அவனது தலைமையில் எப்படியாவது பாண்டவர்களை வென்றுவிடலாம் என்றே அவர்கள் கருதினார்கள். இதன் காரணமாக களத்தில் ஆவேசமாக நின்றார்கள். பாண்டவர் படைகளுக்கும் அன்று மிகுந்த மகிழ்ச்சி. துரோணரும், பீஷ்மரும் இல்லாத கவுரவ படையை ஜெயிப்பது மிகவும் எளிது என்றே அவர்கள் கருதினார்கள். பீமன் ஒரு யானையின் மீது ஏறி, ஆவேசத்துடன் களத்திற்குள் நுழைந்தான். அவனை எதிர்த்து காசி நகர ராஜனாகிய கேமதுõர்த்தி என்பவன் மற்றொரு யானையில் வந்தான். இருவரும் யானையில் அமர்ந்தபடியே பாண பிரயோகம் செய்தனர். கேமதுõர்த்தியின் யானையை பீமன் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்று விட்டான். கேமதுõர்த்தியும் அவ்வாறே பீமனின் யானையைக் கொன்று விட்டான். பின்னர் இருவரும் கதாயுதத்தால் மலையும், மலையும் மோதியது போல் கடும் யுத்தம் செய்தனர். இறுதியில் பீமன், கேமதுõர்த்தியை தன் கதாயுத்தால் உக்கிரமாக தாக்கியதில் அவன் மடிந்து போனான். இதுகண்டு கவுரவப்படைகள் சிதறி ஓடின. கர்ணன் அவர்களுக்கு தைரியம் கொடுத்தான். எக்காரணம் கொண்டும் பின்வாங்கக்கூடாது என உத்தரவிட்டான். இந்த நேரத்தில் நகுலன், தனது குதிரை மீது ஏறி கர்ணனை நோக்கிப் பாய்ந்து சென்றான். இருவரும் மிகக்கடுமையாக யுத்தம் செய்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏராளமான அம்புகளைத் தொடுத்தனர். பின்னர் இருவரும் அவரவர் தேரில் ஏறி நின்றபடியே அம்பு மாரி பொழிந்தனர். சமபலம் பொருந்தியவர்களாக இருந்ததால், இந்த போர் நீண்ட நேரம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் நகுலனுக்கு ஏற்பட்ட அம்புக்காயங்கள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவன் தளர்வடைந்தான். இந்நேரத்தில் கர்ணன் நினைத்திருந்தால் அவனைக் கொன்றிருக்க முடியும். ஆனால், தன் தாய் குந்திக்கு தன் தம்பியரைக் கொல்வதில்லை என வாக்கு கொடுத்திருந்தது நினைவிற்கு வந்தது.