பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
கிருஷ்ணா! உனக்கு தெரியாதது ஒன்றுமல்ல. பொய் சொல்வதால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், அன்பு, புகழ், செல்வம், பலம், பிரார்த்தனை பலன், தர்மம் முதலானவற்றால் சேர்த்த புண்ணியம்... இன்னும் எல்லாமே அழிந்து போகும் என்பது நீ அறியாததல்ல! மாயவனே! நீயே பொய் சொல்லத் துõண்டினால் உலகத்தில் தர்மம் என்னாகும்? என்றார் தர்மப்பிரபுவான தர்மராஜா. கடவுளே பொய் சொல்லத் துõண்டினாலும் கூட, அதிலுள்ள நியாய தர்மத்தை ஆராய்கிறான் மனிதனான தர்மன். மகாபாரதம் எவ்வளவு பெரிய நற்போதனையை மக்களுக்கு வழங்குகிறது பார்த்தீர்களா! இதுபோன்ற பக்தி நுõல்களை சிறுவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். கண்டகண்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, டிவியில் தேவையற்ற காட்சிகளைக் காட்டுவது ஆகியவற்றால் தான் சிறுவர்கள் இன்று கெட்ட வழக்கங் களுக்கு ஆளாகிக் கொண்டிருக் கின்றனர். மகாபாரதம் போன்ற தர்மநுõல்களை பெரியவர்களும் வாசிக்க வேண்டும். சிறுவர்களுக்கும் அதில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். மாயக்காரன் கிருஷ்ணனும் தர்மர் சொல்லும் அதே தர்மம் காக்கத் தானே இப்படி ஒரு போரையே நிகழ்த்துகிறார். அவரும் விடாப் பிடியாக பதில் சொன்னார்.தர்மரே! நீர் சொல்வது ஏற்கத்தக்கதே. ஆனால், ஒரு பொய் பல உயிர்களைக் காப்பாற்ற உதவுமானால், தர்மத்தைக் காக்க உதவுமானால் அதைச் சொல்வதில் தவறில்லை. ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் போக்க பொய்யும் பயனளிக்குமானால், அது உண்மை என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், தர்மத்துக்காக ஒரே ஒரு பொய் தான் சொல்லப் போகிறாய். ஓரிடத்தில் பெருநெருப்பு எரிவதாக வைத்துக் கொள். அதை ஒரு குவளை தண்ணீரால் அணைத்து விட முடியுமா? அந்தத் தீ கொழுந்து விட்டெரியத்தான் செய்யும். நீ செய்த தர்மத்தின் அளவையும், அதனால் கிடைத்துள்ள புண்ணியத்தின் அளவையும் பார்க்கும் போது, இந்தப் பொய் ஒருவேளை பாவத்தையே கொண்டு வருமானாலும் கூட, அது நீ சேர்த்து வைத்திருக்கும் புண்ணியத்தின் தன்மையை எந்த வகையிலும் பாதித்து விடாது, என்றார்.
கண்ணன் என்னும் மன்னன் சொல்லிவிட்டால் அங்கே மறுகருத்துக்கு ஏது இடம்? மறுத்தாலும் தான் அவன் விடுவானா என்ன? அந்த மாயவனின் பேச்சுக்கு தர்மர் கட்டுப்பட்டார். துரோணர் முன்பு தன் தேரில் போய் நின்றனர்.அவர் காதில் மட்டும் விழும்படியாக, ஐயோ! அசுவத்தாமா என்ற மதங்கொண்ட யானை இந்தப் போரில் பல வீரர்களை அழித்ததே! அதை பீமன் கொன்று விட்டானே, என்று மிக மெதுவாகச் சொன்னனர் சற்று அழுத்தமாக ஐயோ! அசுவத் தாமாவை பீமன் கொன்றானே. அவனது வீரத்தை எப்படி பாராட்டுவேன், என்று சற்று அழுத்தமாகச் சொன்னார். அவ்வளவு தான்! துரோணருக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. தன் மகன் அஸ்வத்தாமன் தான் இறந்தான் என நினைத்து வில்லைக் கீழே வீசிவிட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார். இதைப் பயன்படுத்திக் கொண்ட திரவுபதியின் சகோதரனான திருஷ்டத்யும்நன், அவர் மீது அம்பைத் தொடுத்தான். அது அவரது தலையைக் கொய்து விட்டது.இதுகண்டு கவுரவர் படை நடுங்கி விட்டது. அஸ்வத்தாமன் ஓடோடிச் சென்று தன் தந்தையின் பாதங்களை தன் தலை மீது துõக்கி வைத்துக் கொண்டு கதறினான்.என் அன்புத்தந்தையே! வில்லாற்றல், சொல்லாற்றல் ஆகியவற்றின் பிறப்பிடமான நீரா மறைந்தீர்! என்ன கொடுமை! உம்மைக் காப்பாற்ற இயலாமல், இந்த போர்க்களத்தில் நிற்கும் நான் உயிர் வாழத் தகுதியற்றவன். இவ்வுலகிலுள்ள அந்தணர்களெல்லாம் உம் வேத அறிவு கண்டு அஞ்சி ஒதுங்கி நிற்பார்களே! கண்ணனின் சொல் கேட்டு, சத்தியசீலரான தர்மரே பொய் சொன்னாரே! அதைப் பயன்படுத்தி உம்மிடமே வித்தை பயின்ற குரு துரோகியான திருஷ்டத்யும்நனும் உம்மைக் கொன்றானே! இதை நம்பாமல், நீர் வில்லெடுத்து போர் செய்திருந்தால் இந்த திருஷ்டத்யும்நன் என்ன! தேவர்களாலும் உம்மை ஜெயித்திருக்க முடியாதே! ஐயோ! உம்மைப் பிரிந்தும், இவ்வளவு நேரமும் என் உடலில் உயிர் தங்கியிருக்கிறதே, என முட்டி மோதி அழுதான்.
தனது குருவின் மகன் தந்தையை இழந்து தவிப்பது கண்ட துரியோதனன், அவனைத் தரையில் இருந்து துõக்கி நிறுத்தி மார்போடு அணைத்து அஸ்வத்தாமா! என்ன இது! நீயே அழுதால் நம் நிலைமை என்னாகும்? என் குருநாதரின் இழப்பை என்னாலும் தாங்க முடியவில்லை. அவர் எனக்கு கற்றுத்தந்த அந்த பழைய நினைவுகளெல்லாம் என் நெஞ்சில் அலை மோதுகின்றன. எவ்வளவு பெரிய மாவீரரை இழந்து விட்டேன். சேனாதிபதியின்றி கலங்கி நிற்கிறது நம் படை! ஆனாலும், மரணத்தின் பிடியில் சிக்கியவர்களை மீட்பது என்பது எப்படி? நீ மனதைத் தேற்றிக்கொள், என்று ஆறுதல் சொன்னான்.பின்னர் பெரும் கோபமடைந்த அஸ்வத்தாமன், என் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்நனின் உயிரை வாங்கிய பிறகு தான் எனக்கு மறுவேலையே! என முழங்கியபடியே அங்கிருந்து ஆவேசமாகக் கிளம்பினான். இதைக் கண்ட கிருஷ்ணர், தன் தரப்பு மன்னர்களையெல்லாம் அழைத்து, உடனடியாக எல்லாரும் அவரவர் ஆயுதங் களைக் கீழே போட்டு விடுங்கள். தேர்களில் இருந்து இறங்கி கீழே நில்லுங்கள், என்று உத்தரவிட்டார். அஸ்வத்தாமன் பெரும் கோபத்துடன் வரும் போது, அவனை எல்லோருமாக சேர்ந்து எதிர்க்க வேண்டிய சூழலில், இந்த மாயவன் ஏன் இப்படி ஒரு உத்தரவு போட்டார் என யாருக்கும் புரியவில்லை. ஆனாலும், அவரது உத்தரவுக்கு எல்லாரும் பணிந்தனர், ஒரே ஒருவனைத் தவிர!