பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
உடனே, யாராலும் அழிக்க முடியாத காலப்பிருஷ்டம் என்ற தனது வில்லை எடுத்து, நகுலனுடன் போர் செய்தான். நகுலன் அதை உடைக்க முயன்று சோர்வடைந்தான். பின்னர் பெருந்தன்மையுடன், “நகுலா! நீ பிழைத்துப் போ, எனச்சொல்லி கர்ணன் அவனை அனுப்பி வைத்தான். ஆனால், தனது குறி அர்ஜுனன் என்பதால் அவனை நோக்கிச் சென்றான். கிருஷ்ணன் மீதும் அர்ஜுனன் மீதும் பாணங்களை தொடுத்தான். அது அவர்களை ஏதுமே செய்யவில்லை. அர்ஜுனன் தன்னை கிருஷ்ணரிடம் ஒப்படைத்துக் கொண்டவன். அவரது உடலோடும், மனதோடும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவன். இதன் காரணமாக அந்த அம்புகள் அவனை ஏதும் செய்யவில்லை. இறைவனை முழுமையாகச் சரணடைந்தவர்களை, எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். பாணங்கள் வீணாகப் போனதால், கர்ணன் களைத்து நின்றான். அப்போது, ராமாயணப் போர்க்களத்தில் ராமபிரான் ஆயுதங்களை இழந்து நின்ற ராவணனிடம் சொன்னது போல, “கர்ணா! இன்று போய் நாளை வா, என்றான். கர்ணனும் அவமானத்துடன் அகன்று விட்டான்.அந்த சமயத்தில் துரியோதனன், தர்மருடன் யுத்தம் செய்ய தனது தேரில் வந்தான். அந்த தேரையே நொறுக்கிவிட்டார் தர்மர். மீண்டும் இமயமலை போல் உயரமான தேர் ஒன்றில் ஏறி துரியோதனன் வர அதனையும் தவிடு பொடியாக்கினார்.
“துரியோதனா! என்னை ஜெயிப்பதற்கு இது ஒன்றும் சூதாட்ட களமல்ல. இங்கே வீரத்திற்கு மட்டுமே விலை, என சிங்கநாதம் செய்தார் தர்மர். தன்னை அவர் கேலி செய்ததால், துரியோதனன் கோபமும் அவமானமும் அடைந்து தன் கதாயுதத்துடன் தர்மர் மீது பாய்ந்தான். அவனை தன் கதாயுதத்தால் அடித்து தரையில் வீழ்த்தினார் தர்மர். துரியோதனன் நிலைகுலைந்து கிடந்த போது, அஸ்வத்தாமன் ஓடி வந்தான். அவனுக்கு மிகுந்த வருத்தம். முதல்நாள் யுத்தத்தில் தன் தந்தையை வீழ்த்திய பாண்டவர்கள், இன்று மாமன்னனான துரியோதனனை தன்னைப் போன்ற வீரர்கள் இருக்கும் களத்திலேயே வீழ்த்தினரே என்று வருந்தினான். அவனைத் தொடர்ந்து வந்த கர்ணன், தங்களுக்கு தோல்வி உறுதியோ என எண்ண ஆரம்பித்து விட்டான். அவர்கள் வந்ததும் தைரியமடைந்த துரியோதனன், தர்மருடன் மீண்டும் உக்கிரமாக போரிட்டான். ஆனால், பாண்டவர் படைகள் அவர்களைக் கடுமையாகத் தாக்கவே, தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்கள் சிதறி ஓடினர். அத்துடன் சூரியன் அஸ்தமிக்கவே, அன்றைய போர் முடிவுக்கு வந்தது. மறுதினம் பதினேழாவது நாளாக போர் தொடர்ந்தது. கவுரவர் படைத்தலைவன் கர்ணன் தலைமையில் ஏராளமான கவுரவ வீரர்கள் கூடினர். அன்று கர்ணன் அணிந்திருந்த ஆபரணங்கள் வழக்கத்தை விட மிக அதிகமாக ஜொலித்தன. சூரிய பகவான், தன் மகனின் இந்தப் பேரழகை அதிகரிக்கும் வகையில் கிரணங்களை அதன் மீது பாய்ச்சி, அவற்றுக்கு மேலும் ஒளியூட்டினான். தர்மரின் நிலையும் அத்தகையதே. முந்தைய நாள் போரில், துரியோதனனை அடித்து வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த அவர், சிவபெருமான் ருத்திராம்சமாக தேரில் வருவது போல் உக்கிரத்துடன் காணப்பட்டார்.
அவர் கிருஷ்ணரிடம், “மைத்துனரே! இந்தப் போர் இன்று முடிவுக்கு வந்து விடுமா? கர்ணனை இன்று சொர்க்கத்துக்கு அனுப்பி விடலாமா? என்று ஆரூடம் கேட்பவரைப் போல் கேள்வி எழுப்பினார். கேள்வியின் நாயகனும், பதிலின் அதிபதியுமான கிருஷ்ணருக்குத் தான் எல்லாம் தெரியுமே! அதனால் தான், இப்படி ஒரு கேள்வியை அவரிடம் கேட்டார் தர்மர். லட்சுமியின் நாயகனாகிய கண்ணபிரான் ஒரு சிரிப்பை உதிர்த்தார். “தர்மரே! சரியான நேரத்தில் சரியான கேள்வியைக் கேட்டீர்கள். இன்று சூரியகுமாரனான கர்ணன் போரில் இறப்பது உறுதி. அர்ஜுனனின் பாணங்கள் அவனைத் துளைத்து விடும். நாளையும் ஒரு நல்லசெய்தி காத்திருக்கிறது. துரியோதனனை பீமன் கொன்று விடுவது உறுதி. அதன்பின் ஏழு தீவுகளை உள்ளடக்கிய இந்த பூமி உன்னுடையதாகி விடும், என்றார்.கிருஷ்ணரின் இந்த அமுதமொழி கேட்ட தர்மர், “ஸ்ரீகிருஷ்ணா! எங்கள் மானம் மரியாதை எல்லாவற்றையும் உமது கையில் ஒப்படைத்திருக்கிறோம். உம்மால் எல்லாம் முடியும். பரமாத்மா! எங்கள் வீரம், புகழ் அனைத்தையும் காப்பாற்றி எங்களுக்கு ராஜ்யத்தைத் தந்து விட்டாய், என்று நாளை கிடைக்கப் போகும் ராஜ்யத்தை இன்றே தன் வாக்குறுதியால் தந்ததற்காக தர்மர் நன்றி கூறினார். மற்ற பாண்டவர்களும் கிருஷ்ணருக்கு தலை வணங்கினர்.
தர்மர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணா! திரவுபதிக்கு ஐந்து கணவன் மாராக நாங்கள் இருந்து என்ன பயன்? அன்று அவளது புடவை பறிக்கப்பட்ட போது, நீயே அவளைக் காத்தருளினீர். பீமன் சிறுவனாக இருந்தபோது, கங்கை நதிக்குள் கூர்மையான கழுமரத்தை ஊன்றி, அவன் ஆற்றில் குதிக்கும் போது, அதில் குத்தி இறக்க துரியோதனன் சதி செய்தான். அந்த ஏற்பாட்டை முறியடித்து என் தம்பி பீமனை பாதுகாத்தீர். பொருளில்லாத எங்களிடம் பாசம் வைத்து எங்களுக்காக துரியோதனனிடம் துõது சென்றீர்! அமாவாசையை முன்னதாகவே வரச்செய்து எங்களுக்காக அரவான் தன்னைக் களப்பலி கொடுக்கும் நாளை மாற்றியமைத்தீர்! பீஷ்மரைக் கொல்ல அர்ஜுனன் தயங்கிய போது அவனுக்கு கீதோபதேசம் செய்து எங்களை ரட்சித்தீர்! அஸ்வத்தாமனின் நாராயண அஸ்திரத்தில் இருந்து எங்களைப் பாதுகாத்தீர்! உமது சேவைகள் கொஞ்சநஞ்சமா? எதைச்சொல்லி எதை விடுவேன், என்றவர் உணர்ச்சிவசப்பட்டு, கிருஷ்ணரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கினார். கிருஷ்ணரும் தர்மருக்கு தலை வணங்கினார்.“தர்மரே! அச்சம் வேண்டாம். பாண்டவர்களாகிய நீங்கள் ஐவரும் இன்னும் பல்லாண்டு வாழ்வீர்கள். போரில் வெற்றி உங்களுக்கே, என ஆசியளித்தார். பின்னர் கர்ணன், பாண்டவர் தளபதியான திருஷ்டத்யும்னனை நோக்கி கிளம்பினான்.