பதிவு செய்த நாள்
09
மே
2018
12:05
திருவாலங்காடு: கடும்பாடி அம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், 200 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் அடுத்த, ராஜரத்தினாபுரம் கிராமத்தில், கடும்பாடி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மே மாதம், ஒரு நாள் தீமிதி விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின், இரவு, 7:00 மணிக்கு, 200 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். தொடர்ந்து, வாண வேடிக்கை மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.