பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
12:06
தஞ்சாவூர்: தமிழக சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட, தஞ்சாவூர் பெரிய கோவில் சிலைகள், கோவில் வழிபாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின், பல்வேறு கோவில்களில் காணாமல் போனதாக மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும், தனி நீதிமன்றம் உத்தரவுப்படி, கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள், குஜராத்தில் இருந்து மீட்டு, தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்குப் பதிவு செய்த மூன்றே மாதத்தில், இந்த இரு சிலைகளும் மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுமக்கள் வழிபாட்டுக்காக, அதற்குரிய கோவிலிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள், பெரிய கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில், கண்ணாடி பிரபையில் வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், துப்பாக்கி ஏந்திய போலீசாரை நியமித்தும், சிலைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்த சிலைகளை, நேற்று காலை முதல், ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணியரும் வியந்து பார்த்து செல்கின்றனர்.பலர், மொபைல் போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.