பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
12:06
பள்ளிப்பட்டு: பழமையான, ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவில், கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஓராண்டு நிறைவை ஒட்டி, சம்வத்சர உற்சவம் இன்று நடத்தப்படுகிறது. பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்டது, ஈச்சம்பாடி கிராமம். ஈசனை பாடி என்ற பெயர், நாளடைவில் ஈச்சம்பாடி என்றானது.
கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி,தென்னந்தோப்புகளுக்கு மத்தியில், இன்றும் பசுமை மாறாத, அமைதியான கிராமம் ஈச்சம்பாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர், வெளியூர்களுக்கு குடிபெயர்ந்துள்ள நிலையில், இன்று, 30க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர். கிராமத்தின் தென் மேற்கில், விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சிதைந்து வழிபாடு இன்றி காணப்பட்ட கோவில், கட்டுமானம் முறையாக அடையாளம் கண்டு, ஒவ்வொரு கல்லுக்கும் தனி எண் எழுதி, கற்கள் வரிசைப்படி தனி அடையாளத்துடன் பிரிக்கப்பட்டன. பின், ஆகம விதிகளுக்கு உட்பட்டு, பழைய கோவிலின் அமைப்பில் எந்தவித மாற்றமும் இன்றி புதுப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இன்று, சம்வத்சர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதற்கான யாக சாலை பூஜை, நேற்று மாலை துவங்கியது.