பதிவு செய்த நாள்
07
ஜூன்
2018
01:06
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, 22வது ஆண்டாக, திருமணத்தடை நீக்கும், சுயம்வரா பார்வதி யாகம் வரும், 9ல் நடக்கிறது. சத்தியமங்கலம் அருகே, கெம்பநாயக்கன்பாளையம் டேம் ரோட்டில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், திருமணத்தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடப்பது வழக்கம். இங்கு, 22வது ஆண்டாக, வரும், 9ல் காலை, விநாயகர் வழிபாட்டு யாகத்துடன், சகல தோஷங்கள் நீங்க, பதிக பூஜையும், பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள், யாகத்தில் கலந்துகொள்வதால், நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய்தோஷம், ருது தோஷம், நாக தோஷம், முன்னோர்கள் சாபம், பரம்பரை பழி பாவங்கள் உள்பட அனைத்து விதமான தோஷ கிரஹம் விலகி, உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை நீக்கும் திருத்தலங்களான திருமணஞ்சேரி, காளஹஸ்தி, பவானி கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் செய்யும் பூஜை வழிபாடுகள், கிரஹ தோஷ நிவர்த்திகள் இங்கு செய்யப்படுகிறன. எனவே, திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் யாகத்தில் இலவசமாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், கோபி பகுதி வழியாக, கோவிலுக்கு செல்ல, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.