ஒரு பண்டிகை நாளில் மக்கள் குடும்பம் குடும்பமாக தொழுகைக்கு சென்றனர். அப்போது, ஒரு அநாதைச் சிறுவன் மட்டும் கண்களில் கண்ணீர் ததும்ப ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்கவோ, உணவு வழங்கவோ யாருமில்லை. நபிகள் நாயகத்தின் அருட்பார்வை சிறுவன் மீது விழுந்தது. அவனை அழைத்து அன்புடன் விசாரித்தார். அவன் தனது நிலையை சொல்லி அழுதான். நபிகள் நாயகம் அவனது நிலை கண்டு கண் கலங்கினார். உடனே, அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “தம்பி, இனி நீ அழத்தேவையில்லை. ஆயிஷா தான் உனக்கு தாய். பாத்திமா உன் சகோதரி” என்றார். சிறுவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆயிஷா அம்மையார் அச்சிறுவனை வாரி அணைத்துக் கொண்டார். அவனுக்கு புத்தாடை அணிவித்து இனிப்புகள் கொடுத்தார். அவன் நாயகத்தின் அன்புக்கரங்களைப் பிடித்தபடி தொழுகைக்குச் சென்றான். “அனாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்கிறார் நாயகம்.