பதிவு செய்த நாள்
27
ஜூன்
2018
12:06
பழநி: பழநி முருகன்கோயில் ஐம்பொன்சிலை மோசடி வழக்கில், 1997 முதல் பணிபுரிந்த, இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 2004ல் மூலவர் நவபாஷாண சிலையை, மறைத்து ஐம்பொன்சிலை வைத்தனர். அதில் தங்கம், வெள்ளிமோசடி தொடர்பாக, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் குழுவினர் இணை ஆணையர் கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா உட்பட 4 பேரை கைது செய்தனர். மாஜி ஆணையர் தனபால் முன்ஜாமின் பெற்றுள்ளார்.
பழநியில் டி.எஸ்.பி., கருணாகரன் கோயில் கண்காணிப்பாளர்கள், குருக்கள்கள், பண்டாரங்கள், பஷே்கார், ஓய்வுபெற்ற அலுவலர்களிடம் விசாரித்தார். இந்நிலையில், டி.எஸ்.பி., கருணாகரன் கோவை மின்திருட்டு புகார் பிரிவிற்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக டி.எஸ்.பி., வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.அவர் நேற்று பழநியில் 2004ல் ஐம்பொன்சிலை பிரதிஷ்டை தொடர்பான ஆவணங்களை கோயில் இணை ஆணையாளர் செல்வராஜிடம் ஆவணங்களை பெற்றார்.மேலும் அவர் 1997 முதல் 2018 வரையில் பழநிகோயிலில் இணை ஆணையர், உதவி ஆணையராக பணிபுரிந்த, தற்போதைய இணைஆணையர்கள் கோவை ராஜமாணிக்கம், ராமேஸ்வரம் மங்கையர்க்கரசி, சென்னை அசோக், மதுரை நடராஜன்,சென்னை கல்வித்துறை கூடுதல் உதவி ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் மேனகா, மற்றும் ஓய்வுபெற்ற இணை ஆணையர்கள் பா.ராஜா, பாஸ்கரன், ராஜமாணிக்கம், தங்கராஜ், ஜெயராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.அதில் நவபாஷாண சிலை பூஜை முறைகள், 2004ல் ஐம்பொன்சிலை பிரதிஷ்டை, 2006ல் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணியின் போது 21நாட்கள் மூலவர் சன்னதி மூடப்பட்டது குறித்தும் விசாரித்தார். மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும், ஐ.ஜி., விரைவில் வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.