பதிவு செய்த நாள்
30
ஜூன்
2018
12:06
சென்னை: குமரன் நகரில் அமைந்துள்ள, கற்பக விநாயகர் கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், நாளை நடக்க உள்ளது. சென்னை, கோயம்பேடு அடுத்த குமரன் நகரில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது, கற்பக விநாயகர் கோவில். இங்கு, சைவ, வைணவ ஆகமங்களுக்கு உட்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த கோவிலில் மூலவராக, கற்பக விநாயகர் அருள் பாலிக்கிறார். காமகலா காமேஸ்வரர், கமேஸ்வரி, கல்யாண வேங்டேச பெருமாள், மகாலட்சமி, வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, சரஸ்வதி தேவி, அய்யப்பன், சண்டிகேஸ்வரர், சக்ரத்தாழ்வார் ஆகிய சன்னதிகள் உள்ளன. சில மாதங்களாக, அனைத்து சன்னதிகளும் புனரமைக்கப்பட்டன. மேலும், ராமர், சீதா, லட்சுமணர், சூரிய, சந்திர பகவான் ஆகியோருக்கு, தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, திருப்பணிகள் முடிந்த நிலையில், நாளை காலை, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதில், திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர், முத்துக்குமார சுவாமி தம்பிரான் பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பனந்தாள் சர்வேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில், இன்று மாலை, 4:30 மணிக்கு, யாகசாலை பூஜை துவக்கப்பட்டு, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வேத, ஆகம தேவாரம், திருமறை பாராயணம் நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு, கும்பாபிஷேக மலர் வெளியிடப்படுகிறது. கும்பாபிஷேக நாளான, நாளை அதிகாலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. காலை, 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடப்புறப்பாடு நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 9:15 மணிக்கு, அனைத்து விமான ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடு களை, கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து உள்ளனர்.