பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
01:07
உத்திரமேரூர்: திரவுபதியம்மன் கோவிலில், அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, நேற்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த, அழிசூர் திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவ விழா, ஜூன், 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 13வது நாளான நேற்று, தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. மகாபாரதத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட தர்மன், துரியோதனிடத்தில் நாட்டை இழந்ததால், பஞ்ச பாண்டவர்கள், 12 ஆண்டுகள் காட்டில் வசிக்கின்றனர். நாட்டை மீண்டும் பெற, பஞ்ச பாண்டவர்கள் - கவுரவர்கள் இடையே போர் ஏற்படுகிறது. போரில் வெற்றி பெற, தவம் மேற்கொண்டு, கர்ணனை கொல்லும் பாசுபதாச்சிரம் என்ற வில்லை, அர்ச்சுனன் பெறுகிறார். அந்த வில்லை பெறுவதற்கான தவசு மரம் ஏறும் சிறப்பு நிகழ்ச்சி, அம்மன் கோவில் அருகே, நேற்று காலை நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று, நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.