பதிவு செய்த நாள்
07
ஜூலை
2018
03:07
ஆத்தூர்: கோவில்களில் கலைநயமிக்க மரச்சிற்பத்திலான உற்சவர் சிலைகள் உடைந்து கேட்பாரற்று கிடக்கின்றன. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, இந்த சிலைகளை பாதுகாக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் உள்ள நகர், கிராமங்களில் சிவன், பெருமாள், அம்மன் கோவில்களில், கலை நயமிக்க மரச்சிற்பத்திலான உற்சவர் சிலைகள் உள்ளன. இதில், 10 தலை ராவணன், நாககன்னி, வெள்ளை யானை, குதிரை, மயில், எலி, சிங்கம், அன்னம், மயில், புலி உள்ளிட்ட வாகனங்கள், கருடாழ்வார் சிலைகள் மீது அமர்ந்து சுவாமி திருவீதி உலா வருவது வழக்கம்.
அந்த சிலைகள் பராமரிப்பின்றியும், உற்சவ விழாக்கள் நடத்தப்படாததாலும், பல கோவில்களில் மரச்சிற்ப சிலைகள் கரையான் அரித்து, கை, கால் முறிந்து குப்பை போன்று குவித்து வைத்துள்ளனர். சிதிலமடைந்துள்ள சிலைகளை பாதுகாப்பதற்கும், பழமையான ஓவியம், கல்வெட்டு எழுத்துகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2014ல் கோவில்களில் உள்ள மூலவர், உற்சவர் சிலைகள் குறித்த விபரம் சேகரித்தனர். கற்சிலை, உலோக சிலைகளை கணக்கெடுத்த இவர்கள், கலை நயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சிற்பங்கள் குறித்து கண்டுகொள்ளவில்லை. கோவில்களில் கை, கால் இழந்து கரையான் அரித்து, சிதிலமடைந்த உற்சவர் சிலைகள் உள்ளன. மரச்சிற்ப சிலைகளை சரிசெய்வதற்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், மரச்சிற்ப கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உற்சவ விழாக்கள் உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.