பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
12:07
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், இன்று ஆனி தெப்ப உற்சவம் துவங்கி, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும். நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, வீரராகவர் கோவிலில், ஆனி அமாவாசையை முன்னிட்டு, ஆனி தெப்ப உற்சவம், இன்று மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. மாலை, 4:00 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, புண்ணிய தீர்த்தமான ஹிருதாப நாசினி குளத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவர் எழுந்தருள்கிறார். பின், அலங்கரிக்கப்பட்ட தேரில், தெப்பத்தில் வலம் வருவார். குளத்தில் மூன்று முறை வலம் வந்த பின், பெருமாள் வீதி உலா நடைபெறும். வரும், 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வர். மூன்று நாட்களும், பெருமாள் மூலவர், உற்சவர் முத்தங்கி சேவையும், கனகவல்லி தாயார் மூலவர், உற்சவர் முத்தங்கி சேவையும் நடைபெறும்.