கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பம்... l மழைநீர் தேக்க நடவடிக்கை அவசியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2018 12:07
ஆண்டிபட்டி, வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கும் முன் ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை சீரமைத்து மழைநீர் தேக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சில நுாற்றாண்டை கடந்த பழமையானது. இக்கோயில் முன்புற தெப்பம் வளாகத்திற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. மழைக்காலத்தில் தெப்பத்திற்கு வரும் நீர் ஆண்டு முழுவதும் தேங்கி நிற்கும். கடந்த காலங்களில் கோயிலுக்கு தேவையான நீரை தெப்பத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தினர். பக்தர்கள் பலரும் புனிதமாக கருதி வந்த தெப்பம் பராமரிப்பின்றி சேதம் அடைந்து விட்டது. இங்கு வரவேண்டிய மழைநீர் வரத்து கடந்த பல ஆண்டுகளாக திசை மாறி செல்கிறது. இதனால் தெப்பம் நிரம்பவில்லை. அதனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் சரிந்து விட்டன. சுற்றி குப்பை குவிந்து விடுகிறது. தெப்பத்தில் நீர் தேங்கினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் சமன் செய்யப்படும்.கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு ஆண்டு முழுவதும் கிடைக்கும். இன்னும் சில மாதத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கி விடும். அதற்குமுன் நீர் வரத்து பகுதிகளை பராமரித்து, தெப்பத்தில் தண்ணீரை தேக்க அறநிலையத்துறை, ரெங்கசமுத்திரம் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.