ஆழ்வார்குறிச்சி :கடையம் முப்புடாதியம்மன் கோயில், கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய இரு கோயில்களிலும் இன்று (24ம் தேதி) கால்நாட்டு வைபவத்துடன் கொடை திருவிழா துவங்குகிறது. கடையத்தில் தென்காசி - அம்பாசமுத்திரம் மெயின்ரோட்டிற்கு மேற்கே வடக்கு ரத வீதியில் முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. மெயின்ரோட்டிற்கு கீழே கீழக்கடையத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இரண்டு கோயில்களிலும் ஒரே நேரத்தில் தான் கால்நாட்டுதல் வைபவம், காப்பு கட்டுதல் வைபவம், கொடை திருவிழா, தேர் திருவிழா, 8ம் பூஜை வைபவம் என அனைத்து விழாக்களும் ஒன்றுபோல் காலம் காலமாக நடந்து வருகிறது. இதனால் சுமார் 15 நாட்களும் கடையம் கோலாகலமாக காட்சியளிக்கும். கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோயிலின் மூலக்கோயில் கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயிலிற்கு கீழ்புறம் உள்ளது. இந்த இரு கோயில்களிலும் இன்று (24ம் தேதி) இரவு 8 மணியளவில் கால்நாட்டுதல் வைபவத்துடன் கொடை திருவிழா துவங்குகிறது. வரும் 31ம் தேதி இரவு இரு கோயில்களிலும் காப்பு கட்டுதல் வைபவமும், 1ம் திருவிழாவும் துவங்குகிறது. அதனை தொடர்ந்து பிப்.7ம் தேதி கொடை திருவிழாவும், பிப்.14ம் தேதி 8ம் பூஜை வைபவமும் நடக்கிறது. இரு கோயில்களிலும் மண்டகபடி விழாக்களை மண்டகபடிதாரர்கள் நடத்துகின்றனர். கீழக்கடையம் பத்திரகாளியம்மன் கோயிலில் பதினெட்டு பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்துகின்றனர்.