பதிவு செய்த நாள்
25
ஜன
2012
12:01
திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் 55 அடி உயர ராஜகோபுரம் மற்றும் இதர பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஜூன் மாதத்திற்குள் கும்பாபிஷேகத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நெல்லை ஜங்ஷன் வீரராகவபுரத்தில் பழமைவாய்ந்த வரதராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி மகாத்மியத்தின் 16, 17வது அத்யாயத்தில் இக்கோயிலைப் பற்றிய சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளது. இங்கு மூலவர் வீரராகவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார்.வைகானச முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வரும் இக்கோயிலில் கடந்த 1996ம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.தற்போது இக்கோயிலுக்கு 5 நிலைகளுடன் 55 அடி உயரத்தில் ரூ.1.50 கோடி செலவில் பிரமாண்ட ராஜகோபுரம் மற்றும் இதர திருப்பணி வேலைகள் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி துவங்கியது. இந்த பணிகளை வரதராஜபெருமாள் கைங்கர்ய டிரஸ்ட் செய்துவருகிறது. நான்குநேரி ஸ்ரீ கலியன் வானுமாமலை ராமானுஜ ஜீயர் அனுக்கிரகத்துடனும், அவரே கவுரவ போஷகராக இருந்தும் திருப்பணி நடத்தப்பட்டு வருகிறது. 22 அடி உயரத்தில் கல்கார திருப்பணிகளும், 33 அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தில் வைகானச ஆகம விதிப்படி பெருமாள் ஆவர்த்தனங்கள், யாகசாலை திக்குகள், கோபுரத்தின் 4, 5வது நிலைகளில் பெருமாளின் அவதாரங்கள் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கோவர்த்தன கிரி மலையை தூக்கி கொண்டிருப்பது போன்ற அவதாரம், ராமர் பட்டாபிஷேகம், சீதா கல்யாணம், காளிங்க நர்த்தனர், கிருஷ்ணனை பார்க்க குசேலர் அவலுடன் சென்ற காட்சி, கோபிகா வஸ்திரம், கிருஷ்ணர் பிறந்த காட்சிகள், ராமர் பாலம் அமைத்தல் போன்ற காட்சிகள் உட்பட 158 சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் பெயிண்டிங் பணிகள் துவங்கியுள்ளது. மண்டபம் மாற்றியமைப்பு கோயிலில் முகப்பு பகுதியில் இருந்த 16 அடி உயரத்தில் 16 தூண்களுடன் இருந்த முன்மண்டபம் அகற்றப்பட்டு, 22 அடி உயரத்தில் 4 தூண்களுடன் ஒரே மண்டபமாக பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் வரும் 26ம் தேதி துவங்குகிறது. கோயிலை சுற்றிலும் உள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு மாடவீதி அமைத்தல், தரைத்தளம் பதித்தல், கதவுகள் அமைத்தல் போன்ற பணிகள் என மொத்தம் 25 சதவீத பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. இந்த பணிகளையும் விரைவில் முடித்து ஜூன் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உபயதாரர்களுக்கு அழைப்பு: நிதிப்பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீத திருப்பணிகளை விரைவாக நிறைவு செய்ய உபயதாரர்கள் முன்வரவேண்டும் என கைங்கர்ய கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பணிகளுக்கு உதவ விரும்புவோர் எஸ்.வி.பி.கே.டிரஸ்ட், 50, ஏ.பி.பெருமாள் மேலரதவீதி, நெல்லை ஜங்ஷன்-1, மேலவீரராகவபுரம் இந்தியன் பாங்க் கணக்கு எண்:762206482 என்ற எண்ணிற்கு செக், டிடி அல்லது நேரடியாக மணிடிரான்ஸ்பர் மூலம் பணம் அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.