பதிவு செய்த நாள்
25
ஜன
2012
12:01
கோவில்பட்டி:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் மஹாகும்பிஷேக விழா யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 29ந்தேதி மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு பூஜைகள் நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கடந்த 1989ம் ஆண்டு பிப்.10ந்தேதி மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அப்போதிருந்தே கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் மத்தியில் செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டுமென்ற ஆசையும், ஆவலும் மேலோங்கியிருந்தது. இதன் விளைவாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுர திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2000ல் இதற்கான வேலைகள் துவங்கியது. தொடர்ந்து அரசு மானியம் சுமார் 10 லட்சம் உள்பட 142 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அஸ்திவாரம், இரண்டடுக்கு கல்காரம், உபயதாரர்கள் வழியாக கட்டப்பட்ட ஏழு நிலைகளுடன் 91 அடி உயரத்தில் கம்பீரமான ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. இதையடுத்து சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வரும் 29ந்தேதி மஹாகும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் விநாயகர் வழிபாடு, தூய்மீட்பு சடங்குகள் செய்தல், விநாயகர் வேள்வி, ஒன்பதுகோள் வழிபாடு, தான்ய வழிபாடு, யானை வழிபாடு, ஆ நிலை வழிபாடு, மூர்த்திகள் உத்தரவு வாங்குதல் பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை சுமார் 4 மணியளவில் கணபதி வழிபாடு, வேள்வி சாலை தூய்மை, எண்திசை தேவர்கள் வழிபடல் (திசாசாந்தி), திருமண் எடுத்தல், திருக்காப்பிடுதல், ஒன்பது தான்ய விளைத்தல் (முளைப்பாரி இடுதல்), நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து நாளை காலையில் மங்களஇசை, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், இரண்டாம் கால வேள்வி வழிபாடு, நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடும், மாலையில் மங்களஇசை, தமிழ் வேதம் ஓதுதல், மூன்றாம்கால வேள்வி வழிபாடு, நான்கு வேதம் ஓதுதல், நிறை அவி அளித்தல், நான்கு வேதம் ஓதுதல், நான்காம் கால வேள்வி வழிபாடு, தமிழ் வேதம் ஓதுதல், ஐந்தாம்கால வேள்வி வழிபாடு, நான்கு வேதம் ஓதுதல், நிறை அவி அளித்தல், ஒளிவழிபாடும், வரும் 28ம் தேதி காலையில் மங்களஇசை, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல், ஆறாம்கால வேள்வி வழிபாடு, நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடும், மாலையில் மங்களஇசை, நான்கு வேதம் ஓதுதல், நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடு ஆகிய பூஜைகள் நடக்கின்றன. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 29ந்தேதி காலை 4 மணிக்கு மங்களஇசை, தமிழ் வேதம் ஓதுதல், அருட்பேராற்றலை கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு அழைத்து வருதல், நிறை அவி அளித்தல், ஒளி வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு வேள்விச்சாலையிலிருந்து திருக்குடங்கள் திருக்கோயிலுக்குள் வலம் வந்த பின்னர் காலை சுமார் 9 மணியில் இருந்து 9.15க்குள் சுவாமி அம்பாள், புதிய ராஜகோபுரம், அனைத்து விமானங்கள், அம்பாள் சாலகார கோபுரத்திற்கு பரிவார மூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதையடுத்து அன்னதானமும், மூலவர் சுவாமி அம்பாள் சிறப்பு நன்னீராட்டு ஒளி வழிபாடு மற்றும் இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா பூஜைகள் நடக்கின்றன. சிறப்பு பூஜைகளை கோவில்பட்டி பரசுராமபட்டர் நடத்துகிறார். மேலும் இன்று முதல் வருகின்ற 9ந்தேதி வரை நாளும் பக்தி சொற்பொழிவு, பக்தி நடனம், பாட்டு, நகைச்சுவை, பட்டிமன்றம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை செண்பகவல்லியம்மன் கோயில் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துவருகின்றனர்.