எல்லா மதங்களும் அன்பு, கருணை, தர்மம், சமத்துவம் ஆகியவற்றையே போதிக்கின்றன. இவற்றை நமக்கு சொற்பொழிவாளர்கள் அவரவர் மத நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றை காது கொடுத்து கேட்கிறோமா? ஒருவேளை கேட்டாலும், அந்த கருத்துக்களை வாழ்க்கையில் கடைபிடிக்கிறோமா என்றால், ’இல்லை’ என்றே பலர் பதிலளிப்பர். அப்படியானால் சொற்பொழிவுகள் நடத்தி பயன் என்ன? இயேசுநாதர் தன் சீடர்களிடம் கதை ஒன்றைச் சொன்னார். “ஒரு விவசாயி, விதை மூட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு வயலுக்குப் புறப்பட்டான். வழியில் சில விதைகள் சிந்தின. முதலில் பாறைப்பகுதியில் சில விதைகள் விழுந்தன. அவை ஆழமாக வேரூன்ற வழியில்லாததால் இலைப்பருவம் வரை வளர்ந்து கருகிவிட்டன. இன்னும் சில விதைகள் முள்செடிக்குள் விழுந்தது. அது ஓரளவு விளைந்தாலும் முள்ளின் உராய்வின் காரணமாக அருகில் சென்று பலன் பெற முடியாமல் போயிற்று. மற்றதை விவசாயி தன் செழிப்பான நிலத்தில் விதைத்தான். அவை பல மடங்காகி பயன் தந்தது. காது இருப்பவர்கள் இதை கேட்டுக் கொள்ளுங்கள்,” என்று சொல்லிவிட்டு முடித்து விட்டார். இதற்கான பொருள் என்னவென்று அறிந்து கொள்ள அவரவர் முடிவுக்கே விட்டு விட்டார்.
மகான்கள் நம்மிடையே பல நல்ல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அவை பாறையில் விழுந்த விதைகளைப் போலவும், முள்காட்டில் விழுந்த விதைகளைப் போலவும் பயனற்று போய்விடக் கூடாது. அவற்றை குறைந்த பட்ச அளவாவது கடைப்பிடித்தால் தான் முழுபலன் கிடைக்கும். இனிமேல் சமயச் சொற்பொழிவுகளுக்குச் சென்றால், அங்கு கேட்ட நல்ல விஷயங்களை கடைபிடிக்க முயலுங்கள். இதனால் நாடும், வீடும் நலமுடன் இருக்கும்.