பதிவு செய்த நாள்
27
ஜன
2012
10:01
சென்னை : சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் வரும், மார்ச் 6ம் தேதி, தமிழகம் வருகிறார். முதலில் அவர் பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வருகிறார். ஆதிசங்கரர் துவக்கிய நான்கு புகழ்பெற்ற மடங்களில் தலையாயது சிருங்கேரி மடம். இந்த மடத்தின் ஜகத்குருவாக உள்ள ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் தமிழக விஜயம் மேற்கொண்டு பல ஆண்டுகளாகின்றன. தமிழகத்தில் தர்மநெறி தழைத்தோங்க அவர் விஜயம் அமையும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். சுவாமிகள் தமிழகம் வருவதை சிருங்கேரி மடத்தின் நிர்வாகச் செயலர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பில் உள்ள தகவல்: கிருஷ்ணகிரியிலிருந்து மார்ச் 7 மற்றும், 8ம் தேதிகளில் அவர் சேலத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் தங்கி, சிறப்பு பூஜைகள் நடத்துவதுடன், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். தொடர்ந்து அவர், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு செல்வதுடன், கோயம்புத்தூரில், மார்ச் 21ம் தேதி, முதல்,ஏப்.1ம் தேதி வரை, பத்து நாட்கள் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் அவர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் அமைந்த சிருங்கேரி மடத்தில் தங்குவார். மேலும்,கோவையில் ஏப்ரல் 1ம் தேதியன்று சுவாமிகளின், 62வது பிறந்த நாள் விழா சிறப்பு வழிபாடுகள் இருக்கும். இவ்வாறு அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கோவையைத் தொடர்ந்து, அவர் சென்னை விஜயம் அமையும் என்றும், அதற்கான தேதிகள் பின்பு அறிவிக்கப்படும்.