பதிவு செய்த நாள்
27
ஜன
2012
10:01
நகரி : திருப்பதி திருமலை கோவிலில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன நேரங்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். வார நாட்களில் காலை, மாலை நேரங்களில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மூலம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நேரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரையில், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், வரிசையில் காத்திருக்க வேண்டிய நேரம் குறித்த தகவல் அறிவிப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் நாட்களில், 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு எப்போது அனுமதிக்கப்படுவர் என்ற நேர அட்டவணை சரியாக அறிவிக்கப்படுவதில்லை. இதனால், பக்தர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கடும் அதிருப்தியடைந்தனர். பக்தர்கள் எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, வார நாட்களில் எந்த நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்ற அறிவிப்பை தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டிற்கு என்றுள்ள வரிசைக்குள் பிரவேசிக்கும் போது சாமி தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு ஒருமுறை வைகுண்டம் கியூவில் இருந்து வரும் தகவலின்படி பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரங்களில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படும். இதேபோல், பாதயாத்திரை வரும் பக்தர்கள் உடனடியாக தரிசனம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.