பதிவு செய்த நாள்
25
ஜூலை
2018
03:07
மதுரை: பாரம்பரியம், புராதனம் இல்லாத கோயில்களுக்கும் புனரமைப்பு பற்றிய வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்ற அறிவிப்பிற்குதடை கோரிய வழக்கில் அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:பாரம்பரியம், புராதன கோயில்களை புனரமைக்க வழிகாட்டுதல்கள் பற்றி அறநிலையத்துறை 2017 பிப்.,14ல் அறிவிப்புவெளியிட்டது. புராதன கோயில்கள் எனில் கல்வெட்டுகள், சுதைகள், துாண்கள், ஓவியங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் இருக்க வேண்டும். இதை தொல்லியல்துறை நிபுணர்கள், மண்டல, மாநில அளவிலான பாரம்பரிய ஆய்வுக்குழுக்கள், ஆய்வுசெய்யும். பின் திட்ட மதிப்பீடு தயாரித்து, அறநிலையத்துறைக்கு அனுப்பி புனரமைப்பிற்கு அனுமதி அளிக்கப்படும்.அதே அறிவிப்பில் பாரம்பரியம், புராதனம் இல்லாத சாதாரண கோயில்களுக்கும் வழிகாட்டுதல்பொருந்தும் என உள்ளது. இதுஏற்புடையதல்ல. சாதாரண கிராம கோயில்கள் கான்கீரிட் கட்டுமானத்தால் ஆனவை. அவற்றில் கல்வெட்டுகள், சிற்பங்கள், துாண்கள் என புராதன அம்சங்கள் இருக்காது. பாரம்பரியம், புராதனம் இல்லாத கோயில்களுக்கும் புனரமைப்பு வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்ற அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு பெரிய நம்பி நரசிம்மகோபாலன் மனுசெய்தார். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அமர்வு அறநிலையத்துறை கமிஷனர், செயலருக்கு நோட்டீஸ்அனுப்பி ஜூலை 30க்கு ஒத்திவைத்தது.