மானாமதுரை: மானாமதுரையில் ஆடி பிரமோற்ஸவ விழா மண்டகப்படியில் நிகழ்ந்த தீ விபத்தினால் கருகிய உற்ஸவர் வீரஅழகர் சிலைக்கு பரிகார பூஜைகள்,சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டன. மானாமதுரை வீரஅழகர் கோயிலில் கடந்த 19ந் தேதி ஆடி பிர மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வந்த விழாவில் 7 ம் நாள் மண்டகப்படியான நேற்று முன்தினம் மதியம் சுந்தரபுரம் கடைவீதி மண்டிகப்படியில் பந்தலில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததில் உள்ளே இருந்த வீரஅழகர் உற்ஸவர் சிலை,பூஜைபொருட்கள், அலங்கார பொருட்கள், பூஜைப்பெட்டிகள், உட்பட பல பொருட்கள் தீயில் கருகின. இதனையடுத்து அன்று மண்டகப்படி ரத்து செய்யப்பட்டு சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை வீர அழகருக்கு பரிகார ஹோமங்கள்,சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டன.