பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
திருப்பதி தேவஸ்தான நிர்வாக கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடியை ஏலத்தில் விற்பனை செய்ய, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது இருப்பில் உள்ள, 150 டன் எடையுள்ள தலைமுடியை, 6 (கிரேட்) பிரிவுகளாக தரம் பிரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் இணையதள ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய,தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். தினமும் வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களில் அதிகம் பேர், தங்களின் பிரார்த்தனையாக முடி காணிக்கை செலுத்துகின்றனர். தலைமுடியை திருப்பதி தேவஸ்தானம் சேகரித்து தரம் பிரித்து, ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. சர்வதேச மார்க்கெட்டில் "கருப்பு தங்கம் என வர்ணிக்கப்படும் தலைமுடியை, திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு ஒரே நாளில், 471 டன் ஏலத்தில் விட்டது. கடும் போட்டி நிலவியதால், 130 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது இருப்பில் உள்ள, 150 டன் தலைமுடியை, கடந்த முறை ஏலம் எடுத்த இறுதி விலையை ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்து, ஏலத்தில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது நிர்ணயம் செய்துள்ள விலைக்கு ஏலம் போனால், 150 டன் தலைமுடி விற்பனை மூலம், 101 கோடி ரூபாய் வரை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கும் என, அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.