திருச்சி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் தை தெப்ப திருவிழா கொடியேற்றம் நடந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தமாக போற்றப்படுவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில். ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். கோவிலுக்கு எதிரே உள்ள ராமர் தீர்த்தக்குளத்தில், ஸ்வாமி, அம்மன் சமேதராக தெப்பம் கண்டருள்வது வழக்கம். இந்தாண்டு தை தெப்பத்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்றிரவு 9.30 மணிக்கு கன்யா லக்னத்தில், ஜம்புகேஸ்வரர் சன்னதி முன்புள்ள கொடிமரத்திலும், பின்னர் அகிலாண்டேஸ்வரி சன்னதி முன்புள்ள கொடிமரத்திலும் கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தெப்பம், பிப்ரவரி ஆறாம் தேதி நடக்கிறது. அன்றிரவு ஏழு மணிக்கு தை தெப்பத்தில் ஸ்வாமி, அம்மன் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பிப்ரவரி ஏழாம் தேதி நடக்கும் விழாவில், தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.