பணி துவங்கி எட்டு ஆண்டுகள் ஆச்சு: பாதியில் நிற்குது தாயமங்கலம் ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2018 11:08
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் முத்துமாரியம்மன் கோயில் ராஜகோபுர பணி பாதியில் நிற்கிறது. குழந்தை வரம் வேண்டுவோர், அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் இக்கோயிலுக்கு வருகின்றனர். பங்குனி திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். இக்கோயிலில் 1935ல் கட்டப்பட்ட மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோயிலை சுற்றி கட்டடங்கள் கட்டப்பட்டதால் ராஜகோபுரம் தெரிவதில்லை. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று 2010 நவம்பரில் ஏழு நிலை ராஜகோபுரத்திற்கு அப்போதைய தி.மு.க., அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். எழுபது லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆட்சி மாறியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர் முயற்சிக்குபின், 70.50 லட்சம் ரூபாயில் 12 அடி உயர கல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. கோபுர சுதை வேலைக்கு 45 லட்ச ரூபாய்க்கு கடந்த ஆண்டு ‘டெண்டர்’ விடப்பட்டது. பத்து மாதங்களாகியும் அறநிலையத்துறை ஆணையர் அனுமதி தரவில்லை. அடிக்கல் நாட்டி எட்டு ஆண்டுகளாகியும் ராஜகோபுர பணி பாதியில் நிற்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அனுமதிக்காக கோப்புகளை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.