பதிவு செய்த நாள்
02
ஆக
2018
11:08
திருத்தணி: முருகன் கோவிலில், வரும், 5ம் தேதி நடக்கவுள்ள ஆடிக்கிருத்திகை விழாவிற்காக, காவடிகள் விற்பனை, ஜோராக நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலில், நாளை முதல், 7ம் தேதி வரை, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசிப்பர். இந்த நிலையில், திருத்தணி நகரில், காவடிகள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. சிலர், காவடி மற்றும் கூடைகளை தயார் செய்து, சாலையோரம் கடை அமைத்து, விற்பனை செய்கின்றனர்.
ஆடிக்கிருத்திகை விழா துவங்குவதற்கு மூன்று நாட்களே உள்ளதால், பக்தர்கள், காவடிகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து, திருத்தணி பகுதியைச் சேர்ந்த காவடி வியாபாரி சங்கர் கூறியதாவது: ஆடிக்கிருத்திகைக்கு, அதிகளவிலான பக்தர்கள் காவடி எடுப்பர். இதற்காக, புதிய காவடிகள் தயாரித்து, விற்பனை செய்கிறேன். ஒரு காவடிக்கு தேவையான, கட்டை, மணி, கூடைகள் போன்றவை தயார் செய்து, 450 ரூபாய் முதல், அதிக பட்சமாக, 600 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். ஒரு காவடிக்கு, குறைந்த பட்சம், 50 ரூபாய் முதல், 75 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு மாதமாக, காவடிகளை தயார் செய்து, வீட்டிலேயே விற்று வந்தேன். ஆடிக்கிருத்திகை குறைந்த நாட்களே இருப்பதால், சாலையோரம் வைத்து விற்பனை செய்கிறேன். கடந்த, 40 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.