பதிவு செய்த நாள்
06
ஆக
2018
02:08
வடவள்ளி: முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது. காலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகங்கள் செய்து, தங்க கவசங்களுடன் ராஜ அலங்காரத்தில், முருக கடவுள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. அதன்பிறகு, வள்ளி, தெய்வானை சமேதரமாய் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில், திருவீதியுலா வந்தார். ஆடி மாத கிருத்திகையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். சிங்காநல்லுார் பகுதியில் இருந்து, 181 பால்குடங்கள் கொண்டு வந்தனர். மலைமேல் செல்ல பேருந்துக்காக, சுமார் 1 கி.மீ., துாரத்துக்கு பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தனர். அடிவாரத்தில் இருந்து மருதமலை கோவில் வரை, முருக பக்தர்களின் அரோகரா கோஷத்தால், மருதமலையே அதிர்ந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.