செஞ்சி :செஞ்சிக்கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவில்களில் மின் விளக்கின்றி பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செஞ்சி கோட்டை கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் பூவாத்தம்மன் கோவிலும், வேலூர் கேட் அருகே செல்லியம்மன் கோவிலும் உள் ளது. இக் கோவில்களுக்கு எல்லா நாட்களிலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவும் ஏரா ளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக பூவாத்தம்மன் கோவிலுக்கு செல்லும் அகழி பாதையிலும், திருவண்ணாமலை ரோட்டிலும் மின் விளக்குகளை அமைத்திருந்தனர். இதற்கான மின் ஒயர்களை சில இடங்களில் தரையில் பதித்திருந்தனர். கடந்தாண்டு மத்தியில் கிருஷ்ணகிரி கோட்டை அகழி சுவர்களை சீரமைத்த போது இந்த மின் ஒயர்கள் சேதமடைந்தன. இதன் பிறகு இப்பகுதியில் மின் விளக்குகள் எரிவது தடை பட்டது. கம்பங்களில் இருந்த மின் விளக்குகளையும் குரங்குகள் கீழே தள்ளி விட்டன. ஆங்காங்கே மின் இணைப்புகளும் பாதுகாப்பு இல்லாமல் திறந்த படி உள்ளன. இதை சரி செய்து தருமாறு கோவில் நிர்வாகிகள் செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் மனு கொடுத்தனர். இருந்தும் பல மாதங்களாக சரி செய்யாமல் உள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பேரூராட்சி நிர்வாகத்தினர் மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.