பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம், அம்மன் விமானம் ஆகியவை திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், மஹாலட்சமி ஹோமம், கோ பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, ரட்ஷாபந்தனம், முதல் கால யாகபூஜையும், இரவு 9 மணிக்கு வேதநாயகி அம்மன் விமானத்தில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், நாடி சந்தானமும், மஹா பூர்ணாஹதி தீபாராதனையும், கடம் புறப்பாடும் நடந்தது. 8.50 மணிக்கு ராஜகோபுரம், அம்மன் விமானம், மூலவர் விமானம் ஆகியவற்றில் உள்ள கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் திருச்சி சண்முகம், தீர்த்தமலை கார்த்திகேய சிவம் ஆகியோர் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.தொடர்ந்து மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (ஜன., 30) 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடக்கிறது. விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி, கலெக்டர் மகேஸ்வரன், எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, யூனியன் சேர்மன் ஜமுனா கிருஷ்ணன், டவுன் பஞ்சாயத்து சேர்மன் வாசுதேவன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், துணைசேர்மன் வேல்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் சுப்பிரமணியன், சுவாமிநாதன், உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் முருகன், கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.