பதிவு செய்த நாள்
31
ஜன
2012
10:01
பழநி : பழநி தைப்பூசத் திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை காலை முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். கொடிப்படம், ரத வீதிகள் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து, கொடி கட்டி மண்டபத்தை வந்தடையும். காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழா நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடக்கும். பிப்.,6 இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்து, இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி உலா வருவார். ஏழாம் நாளான பிப்., 7 ல், தைப்பூசம் நடக்கிறது. காலை 5 மணிக்கு முத்துக்குமார சுவாமி, சண்முகநதி தீர்த்தவாரியில் எழுந்தருள்வார். மாலை 4.36 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படும்.
கட்டுப்பாடு: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி கோயிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடக்கின்றன. பழநி கோயில் தைப்பூச விழா, நாளை துவங்கி பிப்., 7 வரை நடக்கிறது. பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிப்., 5 முதல் 7 வரை, பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருக்கும். பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வது, சுவாமி தரிசன வழியில் பிரச்னைகளை தவிர்க்க, கோயில் நிர்வாகம், ஏற்பாடுகளை செய்துள்ளது. சில நாட்களாக, படிப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்குச் செல்ல யானைப்பாதையும், அடிவாரத்திற்கு இறங்கி வர படிப்பாதையும் பயன்படுத்தப்படுகிறது. கூட்ட நெரிசலின் போது, அடிவாரம் பாதவிநாயகர் கோயில் நுழைவாயில் வழியே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. கும்பாபிஷேக நினைவரங்கு நுழைவாயில் பகுதியில், ஆறு வழி தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து பாதைகளில் பக்தர்களும், ஒரு பாதை போலீசாருக்கும் பயன்படுத்தப்படும். மலைக்கோயில் வடக்குவெளி பிரகாரத்தில், நான்கடி சுற்றுச்சுவர் உள்ளது. இப்பகுதியில் பக்தர்கள் பழநி நகரைக் காணும் வகையில், திறந்த வெளியாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக, மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.