தென்காசி : குத்துக்கல்வலசை இளமலை ராமர் கோயிலில் கொடை விழா நடந்தது. தென்காசி அருகே குத்துக்கல்வலசை நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இளமலை ராமர் கோயிலில் கொடை விழா நடந்தது. முதல் நாள் இரவு விளக்கு பூஜை, சிறப்பு வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் காலையில் விநாயகர் கோயிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். மதியம் சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் குற்றாலத்திலிருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள் அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணர், ஹனுமான் எழுந்தருளினர். மேள தாளம் முழுங்க, வாண வேடிக்கையுடன் சப்பர பவனி துவங்கியது. ஊர் நாட்டாண்மை முருகேசன் தலைமையில் விழா கமிட்டியினர் சப்பர பவனியை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியே சப்பர பவனி நடந்தது. காலை 8 மணிக்கு சப்பரம் கோயில் நிலை வந்து சேர்ந்தது. சிறப்பு தீபாராதனைக்கு பிறகு சப்பரத்திலிருந்து உற்சவர்கள் கோயிலுக்கு எழுந்தருளினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.