பதிவு செய்த நாள்
23
ஆக
2018
01:08
திருச்சி, காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் குறைந்துள்ளதால், ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் படித்துறை சுத்தப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.கடந்த வாரம் மேட்டூர் அணையில் இருந்து, 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டதால், முக்கொம்பு அணையில் இருந்து, காவிரி ஆற்றில், 54 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.அகன்ற காவிரியின் இரு கரைகளையும் தொட்டு, கரைபுரண்டு ஓடிய வெள்ளம், 16ம் தேதி இரவு, திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையை மூழ்கடித்தது.
அங்கு, பொதுமக்கள், பக்தர்கள் பாதுகாப்புடன் நீராடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள், படிக்கட்டுகள் அனைத்தையும் மறைத்து, வெள்ளம் ஓடியதால், அம்மா மண்டபமும், படித்துறைக்கு செல்லும் வழியும் அடைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பு போட்டு, மக்கள் படித்துறைக்கு சென்று நீராட தடை விதிக்கப்பட்டது.இரண்டு நாட்களாக, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணையில் இருந்து, காவிரி ஆற்றிலும் தண்ணீர் திறப்பு, 30 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், படித்துறையை மறைத்து ஓடிய வெள்ளம், 5 அடி வரை குறைந்து, படிகளும், தடுப்பு கம்பிகளும் வெளியே தெரிகின்றன.இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள், நேற்று படித்துறையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். படித்துறையில் தேங்கியிருந்த சகதியையும், தடுப்பு கம்பிகளில் சிக்கியிருந்த புதர் செடிகள் மற்றும் குப்பையையும் அவர்கள் அப்புறப்படுத்தினர். காவிரியில் வெள்ளம் குறைந்துள்ளதால், அம்மா மண்டபம் மட்டும், நேற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டிருந்தது.