பதிவு செய்த நாள்
23
ஆக
2018
01:08
வழுதாவூர்: வழுதாவூர் கெங்கையம்மன் கோவில் குளம் துார் வாரப்படாமல், கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பின்புறத்தில், கோவில் திருக்குளம் உள்ளது. கடந்த காலங்களில், இப்பகுதி மக்கள், கோவில் குளத்து நீரை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், துார் வாரப்படாததால், குளம் முழுவதும் கோரை புற்கள், செடிகள் வளர்ந்து காடு போல மாறியுள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குளத்திற்கு நேரடியாக செல்கிறது. இதனால், குளம் முழுவதும் கழிவுநீர் நிரம்பி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே, வழுதாவூர் கெங்கையம்மன் கோவில் குளத்தை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.