பதிவு செய்த நாள்
24
ஆக
2018
12:08
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று குல தெய்வ வழிபாட்டில் நரிக்குறவர்கள் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்தனர். மாநிலம் முழுவதும் இருந்து பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். சிவகங்கை பழமலைநகரில் 300 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. நான்கு பிரிவுகளான இவர்கள், காளி, மீனாட்சி, மாரியம்மன், மதுரை வீரன் ஆகிய குலதெய்வங்களை வழிபடுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். இருபத்து ஒன்பது தலைமுறையாக நடக்கிறது.
இந்த ஆண்டு வழிபாட்டிற்காக 30 நாட்கள் விரதம் இருந்தனர். பத்து நாட்களுக்கு முன், 25 ஓலைக் குடில்கள் அமைத்தனர். அதில் சாமிகளை வைத்து பூஜை செய்து வந்தனர். நேற்று அதிகாலை காளி, மதுரை வீரன் தெய்வங்களுக்கு 15 எருமைகள், 20 ஆடுகளை பலி கொடுத்தனர். சாமியாடிகள் ரத்தத்தை கையில் ஏந்தி குடித்தனர். தொடர்ந்து ஆடி, பாடி கொண்டாடினர். பலியிட்ட எருமை, ஆடுகளை சமைத்து விருந்து வைத்தனர். மதுரை, நெல்லை, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். விழா ஆக., 29 வரை நடக்கிறது. தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் கூறியதாவது: தமிழகத்திலேயே சிவகங்கையில் தான் குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக நடத்துவோம். நான்கு பிரிவினரும் தனித்தனியாக, அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வர். துஷ்டர்களை விரட்ட எருமை, ஆடுகளை பலி கொடுக்கிறோம். நாங்கள் வழிபாடு செய்யும் ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யும், விவசாயமும் தழைத்தோங்கும், என்றார்.