பதிவு செய்த நாள்
24
ஆக
2018
12:08
திருப்பூர் : இயற்கையை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, செடி முளைக்கும் விதை விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படும் சிலைகள், நீரில் கரையாமல் மிதப்பதால், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. இந்நிலையில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, விநாயகர் சிலைகளை, சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தயாரித்துள்ளனர். களிமண், இயற்கை உரம், விதைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகரை கரைத்தால், செடி முளைத்து, மரமாக வளரும்.
சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த பாலசந்தர், 30, என்பவர் கூறியதாவது: பிற மாநிலங்களில், சுற்றுச்சூழலுக்கு உகந்த விதை விநாயகர் தயாரிப்பதை அறிந்து, அதேபோல, உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம். இயற்கை உரம், விதை போன்றவற்றை சேகரித்து, பெங்களூருக்கு அனுப்பி, அங்கு சிலை உருவாக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுற்றதும், வழக்கமாக, நீர் நிலைகளில் கரைப்பதற்கு பதிலாக, வீட்டில் மண் நிரப்பிய தொட்டியில், சிலையை வைத்து, தண்ணீர் ஊற்ற வேண்டும். சிலை கரைந்து, ஒரு சில நாட்களில் செடி முளைக்கும். செடி பெரியதாக வளர்ந்தவுடன், மண் சட்டியுடன் புதைத்து விட்டால், மரமாகி வளரும். இதனால், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லை. தமிழகத்தில், முதல் முறையாக, இந்த முயற்சியை எடுத்துள்ளோம். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில், இந்த விதை விநாயகர் விற்பனையை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.