திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழையால் பம்பையில் 100 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டதாகவும், மண்டல, மகரவிளக்கு காலம் தொடங்குவதற்கு முன் போர்கால அடிப்படையில் பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பம்பையில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார். உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: பம்பையில் அவசரமாக மூன்று இரும்பு பாலங்கள் அமைக்கப்படும். பாலம் அமைக்க ராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவார். இவருடன் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் பம்பையில் முகாமிட்டு பணிகளை மேற்கொள்வார். இதற்கான செலவு முழுவதும் தேவசம்போர்டு செய்ய வேண்டும். வெளிமாநில காண்டிராக்டர் ஒருவரை தேர்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும். பம்பையில் இனி கான்கிரீட் கட்டடங்கள் வராது. நிலக்கல் வரை மட்டும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் பம்பை வரவேண்டும். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக அந்தந்த துறை செயலாளர்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.