பதிவு செய்த நாள்
06
செப்
2018
02:09
பனமரத்துப்பட்டி: பச்சையம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனூர், பச்சையம்மன் கோவிலில், கடந்த, 29ல், பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த, 1ல், சுவாமி தண்டல் வசூலிக்க புறப்பட்டது. நேற்று (செப்.,5ல்) காலை, யாகம் நடத்தி, அக்னி குண்டத்துக்கு தீ பற்ற வைத்தனர். பச்சையம்மன் கோவிலிலிருந்து, கார்டியன் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று, அங்குள்ள சுவாமிகளை, விழாவுக்கு அழைத்து வந்தனர். மாலை, மானியக்காடு கிணற்றில் பக்தர்கள் நீராடி, சுவாமிக்கு பூஜை செய்து, கையில் காப்பு கட்டினர். தொடர்ந்து, சக்தி அழைத்தல் நடந்தது. அக்னி குண்டத்தில் இறங்கும் பக்தர்களை, பூசாரி சாட்டையால் அடித்து, ஆசி வழங்கினார். பின், ஏராளமானோர் ஊர்வலமாக சென்று, கோவில் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் பரவசம்: தீமிதி திருவிழாவை முன்னிட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அருகே, உமையாள்புரம், பச்சியம்மன் கோவிலில், நேற்று (செப்., 5ல்) மாலை, சக்தி அழைத்தல், சுவாமி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகம் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி, திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில், சிலர் காவடியை சுமந்து, குழந்தைகளை தூக்கியபடி, தீ மிதித்தனர். இதையொட்டி, மூலவர் பச்சியம்மன், உற்சவர் மற்றும் பரிவார தேவதைகள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், கோவிலை யொட்டியுள்ள ஆஞ்சநேயர் சன்னதியில், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.