பதிவு செய்த நாள்
06
செப்
2018
02:09
ஆத்தூர்: விநாயகர் சதுர்த்தி விழாவில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், ஆத்தூரில், ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், தாசில்தார்கள், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிட்ட அலுவலர்கள், சிலை அமைப்பு நிர்வாக குழுவினருடன், வரும், 13ல் நடக்கும், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது
குறித்து ஆலோசனை நடந்தது. பின், செல்வன் பேசியதாவது: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற்று, விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும். சிலைக்கு தலா, 15 பேர் அடங்கிய பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், ஐந்து பிரதிநிதிகளை, பொறுப்பாளராக அமைக்க வேண்டும். சிலை உயரம், பீடத்துடன் சேர்த்து, 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
களிமண்ணால் செய்த சிலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஊர்வலம், போலீசார் அனுமதித்த வழிகளில் மட்டும் செல்ல வேண்டும். அப்போது, பட்டாசு வெடிக்கவோ, ஆயுதங்களை எடுத்துவரவோ கூடாது. நான்குசக்கர வாகனங்களில் மட்டுமே சிலைகளை எடுத்துச்செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள், அவற்றை, உரிய இடத்தில் கரைக்க வேண்டும்.
சிலை நிறுவுதல், தடையின்மை சான்று பெற, போலீஸ், மின்வாரியம், தீயணைப்புத்துறை அடங்கிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.