பழநி:பழநி முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைமோசடி வழக்கில் உற்ஸவர் சிலையை, போலீசார் கும்பகோணம் கொண்டுசென்றபின் அப்படியே கிடப்பில் உள்ளது. பழநி முருகன் கோயிலில் கடந்த 2004ல் மூலவர் நவபாஷாண சிலையை மறைத்து, 220 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலையை வைத்தனர். அதில் தங்கம், வெள்ளி மோசடி செய்தது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா உட்பட 4 பேரை கைது செய்தனர். முன்னாள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலும் சிக்கி உள்ளார். ஜூலை 11ல் ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் குழுவினர், பழநி முருகன்கோயிலில் இருந்து ஐம்பொன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு திருநாகேஸ்வரத்திலுள்ள திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சிலை வைக்கப் பட்டுள்ளது. அதன்பின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தற்போது ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு தொடர்பாக ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் குழுவினர் விசாரணையை துவக்கி யுள்ளனர். பழநி உற்ஸவர் சிலை மோசடி வழக்கையும் துரிதப்படுத்தி குற்றவாளி களுக்கு தண்டனை பெற்றுத் தர பொன். மாணிக்கவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என முருக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.