பதிவு செய்த நாள்
08
செப்
2018
02:09
திருவள்ளூர்:யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் விநாயகர் சிலை அமைத்து, காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, விநாயகர் சிலை கமிட்டி யினரிடம், எஸ்.பி., வேண்டுகோள் விடுத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை அமைப்பாளர் களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேற்று (செப்., 7ல்) நடந்தது.
திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய உட்கோட்டங்களில் இருந்து விநாயகர் சிலை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை அமைத்தல், கரைத்தல் குறித்து நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக அரசு விதிமுறை வகுத்துள்ளது.
அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். விநாயகர் சிலையினை போக்குவரத்து இடையூறு இல்லாமல், 10 அடிக்குள் அமைக்க வேண்டும்.
சிலையினை வருவாய், காவல் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களின் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட அளவிலேயே சிலைகள் வைக்க வேண்டும். கூடுதல் சிலைகளை, காவல் துறை அனுமதி யில்லாமல் வைக்க கூடாது.
மின்கம்பிகளில் கொக்கி போட்டு மின்சாரம் திருடக்கூடாது. பிற மதத்தவர், நோயாளிகள், மாணவ - மாணவியர் என, யாருக்கும் இடையூறு இல்லாமல், சிலைகளை அமைத்து, காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் சிலம்பரசன், தில்லை நடராஜன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
தடையில்லா சான்றுக்குதட்டிக் கழிப்பு
கூட்டத்தில் பங்கேற்ற சிலை அமைப்பாளர்கள் கூறியதாவது: கோட்டாட்சியரிடம் மனு பெற்று, காவல் துறை, மின் வாரியம், தீயணைப்பு துறை, ஊராட்சி நிர்வாகம் ஆகியோரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என, கூறுகிறீர்கள்.
ஆனால், காவல் துறை தவிர மற்ற துறையினர் சான்று அளிக்காமல் தட்டி கழிக்கின்றனர். நீர்நிலைகளில் தற்போது தண்ணீர் இல்லாததால், சிலை கரைப்பதில் சிக்கல் உள்ளது.
மேலும், பலரும் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் தான் வீடு திரும்புகின்றனர். எனவே, மாலை, ஆறு மணிக்கு மேல் சிலை கரைக்க அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்த, எஸ்.பி., பொன்னி, பிற துறை சான்று அளிக்கவும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பவும் ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி விதிமுறை மாற்ற எனக்கு அதிகாரம் இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.