திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி பெருவிழா செப்.,4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ரிஷப வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். இன்று மாலை 5:00 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கோயில் குளத்திற்கு அருகில் சூரனை விநாயகர் வதம் செய்கிறார். செப்.,12ல் மாலையில் விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பத்தாம் திருநாளான செப்.,13ல் விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் முக்குறுணி கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் சுவாமிகள் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடைகிறது.