பதிவு செய்த நாள்
17
செப்
2018
11:09
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், விசர்ஜனத்துக்காக நேற்று (செப்.,16ல்) ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டன. வண்ணமயமான ஊர்வலத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்து பரவசப்பட்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாநகரில், 1250 சிலைகள், 13ம் தேதி காலை, பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்த நான்கு நாட்களாக, சிறப்பு பூஜை, விளையாட்டு போட்டி, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. விசர்ஜன ஊர்வலம், நேற்று கோலாகலமாக நடந்தது.
* திருப்பூர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 500க்கும் மேற்பட்ட சிலைகளின் ஊர்வலம், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கியது; ஈஸ்வரன், செந்தில், சம்பத் ஆகியோர் காவி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் குமார் உட்பட பலர் பேசினர். இந்து முன்னணி தொண்டர்கள் கொடி அணிவகுப்பு, தத்ரூபான யானை ரதம், மயில் வாகனத்தில் முருகன் ரதம், புலி ஆட்டம், செண்டை மேளம், தப்பாட்டம் உட்பட ஏராளமான கலை நிகழ்ச்சிகள் வரிசையாக இடம் பெற்றன. அதன்பின், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.
திருப்பூர் தெற்கு பகுதியில், 400க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த சிலைகள், தாராபுரம் ரோடு தலைமை அரசு மருத்துவமனை அருகே கொண்டு வரப்பட்டன. ஊர்வலத்தை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பா.ஜ., தெற்கு தொகுதி பொறுப்பாளர் தங்கராஜ், மாநில செயலாளர் தாமு வெங்கடேசன், மத்திய கயறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி, ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
விசர்ஜன ஊர்வலத்துக்கு முன், காவடி ஆட்டம், பரத நாட்டியம் என, பல கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்வது போன்ற ரதம், பலரையும் கவர்ந்தது. புலி உருவம் வரைந்து நடனமாடியவர்களை, பலரும் ரசித்தனர். புதூர் பிரிவு, பெரிச்சிபாளையம், தென்னம்பாளையம், டி.கே.டி., பஸ் ஸ்டாப், பழைய பஸ் ஸ்டாண்ட், டைமண்ட் தியேட்டர் வழியாக ஊர்வலம் ஆலாங்காடு சென்றடைந்தது.
திருப்பூர் மேற்கு ஒன்றிய அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 300 சிலைகள், கே.வி.ஆர்., நகர் சந்திப்பு பகுதியில் ஒருங்கிணைப்பட்டு, ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் செந்தில், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில், முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பத்மநாபன் ஊர்வலத்தை துவங்கி வைத்தனர்.
பொதுக்கூட்டம்விநாயகர் சிலைகள், ஆலங்காட்டில் பொதுக்கூட்ட திடல் அருகே வந்து சேர்ந்தன. இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். மத்திய கயறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், சினிமா டைரக்டர் பேரரசு, மாநில பொது செயலாளர் முருகானந்தம், பா.ஜ., கோட்ட இணை பொறுப்பாளர் மணி, மாவட்ட தலைவர் சின்னசாமி உட்பட பலர் பேசினர்.
பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு: திருப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட், கே.வி.ஆர்., நகர் மற்றும் பெரிச்சிபாளையம் பகுதியில், விசர்ஜன ஊர்வலத்தின் போது, எந்தவித அசம்பா விதமும் ஏற்படாத வகையில், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, பதட்டம் நிறைந்த பகுதி என்று கண்டறியப்பட்ட, பெரிய தோட்டம் மற்றும் கே.பி.என்., காலனி பகுதிகளில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள், பூசணிக்காய் சுற்றி, திருஷ்டி கழித்து, மேளதாளங்களுடன், வேன்களில் எடுத்து செல்லப்பட்டன.சில இடங்களில், பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. லேசான மழை பெய்த போதும், அதனை பொருட்படுத்தாமல், ஊர்வலம், அமைதியாக நடைபெற்றது.